கேப்டனின் மனசை குளிர வைக்கும் நடிகர் புகழ்.. ரஜினி, கமலுக்கு கூட இந்த யோசனை வரலையேப்பா..!

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்று எம்ஜிஆர் ஒரு படத்தில் பாடியிருப்பார். அந்த சிறந்த வரிகள் அவருக்கும் பொருந்தும். அவர் வழியை பின்பற்றி, பிறருக்கு உதவுவதையே தனது வாழ்க்கை லட்சியமாக மனதில் வைத்து வாழ்ந்து மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கும் பொருந்தும். அதனால்தான் விஜயகாந்துக்கு கருப்பு எம்ஜிஆர் என்று ஒரு பெயரும் உண்டு.

மதுரையில் இருந்து சென்னைக்கு விஜயராஜாக வந்தேன். சினிமா நடிகராக, விஜயகாந்த் ஆனேன். இப்போது அரசியல்வாதியாக இருக்கிறேன். பெயர் வேண்டுமானால் மாறலாம். ஆனால் என்னுடைய குணம் ஒன்றுதான் என, எப்போதோ ஒரு நேர்காணலில் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். அந்த குணம், பசியோடு இருக்கிறவர்களுக்கு உணவு தருவதும், உதவி கேட்டு வருபவர்களுக்கு தயங்காமல் உதவுவதும்தான்.

உடல்நலக்குறைவால் கடந்த எட்டு ஆண்டுகளாகவே போராடிக்கொண்டு இருந்தார் கேப்டன் விஜயகாந்த். கடந்த மூன்று ஆண்டுகளாக நினைவாற்றல் குறைந்து போய், பேசவே முடியாமல், பிறரது உதவியின்றி நடக்கவும், நிற்கவும் முடியாத அளவுக்கு மிக கொடுமையான ஒரு போராட்டத்தில் வாழ்ந்து வந்த கேப்டன், கடந்த மாதம் 28ம் தேதி மண்ணுலகை விட்டு பிரிந்து மறைந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில், அவரது உடல் நல்லடக்கம் செய்யபப்ட்ட இடத்தில் பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். அங்கு அஞ்சலி செலுத்த வந்த குக்வித் கோமாளி மூலம் பிரபலமான, நடிகர் புகழ் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது, கேப்டனின் நினைவாக இனிமேல் கேகே நகரில் உள்ள எனது அலுவலத்தில் தினமும் 50 பேருக்கு சாப்பாடு போடுவேன், என உறுதியளித்தார்.

சாதாரண நிலையில் வளர்ந்துவரும் ஒரு காமெடி நடிகராக புகழ் உள்ளார். அவருக்கே இப்படி ஒரு உயர்ந்த எண்ணம் வரும்போது ரஜினி, கமல், விஜய் போன்ற ஜாம்பவான் நடிகர்கள், ஒரு படத்தில் நடிக்க 100 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்குகிற அவர்களுக்கு இதுபோன்ற நல்ல யோசனைகள் தோன்றவில்லையே, என்பதுதான் மிக கசப்பான, வேதனையான விஷயமாக இருக்கிறது.