MGR ஐ பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நடிகை..! ஷூட்டிங் ஸ்பாட்டில் தெனாவெட்டு..!

ஒரு மனிதர் வாழும்போதே இருந்த அதே புகழுடன் இறந்த பின்பு, 36 ஆண்டுகள் ஆன பின்பும் அதே பெயர் செல்வாக்குடன், புகழுடன் மக்கள் மனங்களில் வாழ முடியுமா என்றால் அது முடியும். அவர் காலத்தை வென்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒருவர் மட்டுமே.

இன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்த தினம். நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான இடங்களில் அவரது திருவுருவ படத்தை மலர்களால் அலங்கரித்து மக்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதற்கு காரணம் அவரது மங்காத புகழுக்குரிய செயல்களும், அவரது பண்புகளுமே காரணம்.

எம்ஜிஆர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறார் என்றால், அங்கு கப்சிப் என நிசப்தமாக இருக்கும். சின்னவர், வாத்தியார் என்பதுதான் அவரை மற்றவர்கள் அடையாளமாக சொல்வது. எம்ஜிஆர் என்று பெயரை சொல்லவும் பலரும் அச்சப்படுவர் என்பதை விட அதை மரியாதைக்குறைவாக நினைப்பர்.

எம்ஜிஆர் யாரையும் மிரட்ட மாட்டார், யாரிடமும் அதிகார தோரணையில் நடந்துக்கொள்ள மாட்டார். ஆனால் அவர் நின்றால், நடந்தால், வந்தாலே அந்த இடம் பரபரப்பாகி விடும். எம்ஜிஆர் இருக்கிறார் என்றாலே, அங்கு ஒரு மரியாதை சூழலுக்கு எல்லோரும் தயாராகி விடுவர்.

ஆனால் அப்படி சக நடிகர்களே எம்ஜிஆரை பார்த்து பேசவும், சகஜமாகவும் நடந்துக்கொள்ள அச்சப்பட்ட சூழலில், மிஸ்டர் எம்ஜி ராமச்சந்திரன், என்று பலபேர் முன்னிலையில் பெயர் சொல்லி அழைத்தவர் நடிகை பானுமதி.

எம்ஜிஆரை விட ஒரு வயது மூத்தவர் என்பதை விட கலைகளில் சிறந்த ஆற்றல் மிக்கவர். நடிகை, பாடகர், எழுத்தாளர், நடனம் என பலவிதங்களிலும் சிறந்து விளங்குபவர்.

எம்ஜிஆரை பானுமதி பெயர் சொல்லி அழைத்தாலும் அதை எம்ஜிஆர் பொருட்படுத்திக் கொள்ளாமல் எப்பவும் போல, இயல்பாகவே இருப்பது வழக்கம். அதற்காக, தன் மரியாதை குறைந்துவிட்டதாக ஒருபோதும் கருதியதில்லை எம்ஜிஆர். இதுபோன்ற பல உயர்ந்த பண்புகள் எம்ஜிஆரிடம் நிறைந்திருந்தன.