“வில்லன்களை கொண்டாடிய தமிழ் சினிமா..” ஹீரோக்கள் எல்லாம் டம்மிதான்

சினிமாவில் ஹீரோவாக நடிப்பவர்களை விட வில்லன் நடிகர்கள் எளிதில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். ஹீரோவாக நடிப்பவர்கள் நல்லவன் கேரக்டரில் மட்டுமே நடிக்க முடியும். ஆனால் வில்லனாக நடிப்பவர்கள் எல்லாவிதமான வில்லத்தனங்களையும் காட்டி நடிக்க முடியும். அப்படி விதவிதமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர்.

தமிழ் சினிமாவில் எம்என் நம்பியார், பிஎஸ் வீரப்பா, ரகுவரன், நாசர், சத்யராஜ், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், ராதாரவி போன்றவர்களின் வில்லத்தனமான நடிப்பை, அவர்கள் நடித்த பழைய படங்களில் இப்போதும் வெகுவாக ரசிக்க முடிகிறது. அமைதிப்படை சத்யராஜ் போன்ற நக்கலான வில்லன் கேரக்டரில் நடிக்க ஆசை என நடிகர் விஜய் ஒருமுறை பேசியிருக்கிறார்.

ரகுவரன் சொன்ன ஐநோ என்ற ஒரு வார்த்தை இன்றும் அவரது நடிப்பை சொல்லும் ஒரு அக்மார்க் டிரண்டிங் டயலாக் ஆக இருக்கிறது. தேவர் மகன் மாயா நாசர், இப்போதும் பயமுறுத்துவார். கேப்டன் பிரபாகரன் படத்தில் வீரபத்ரன் கேரக்டரில் நடித்த மன்சூர் அலிகானின் நடிப்பை இன்றும் ரசிக்க முடிகிறது. எம்ஜிஆர் சிவாஜி காலங்களில் நம்பியார், வீரப்பா வில்லத்தனங்களை எல்லாம் ரசிகர்கள் கொண்டாடினர் என்றால் அது மிகையல்ல.

அதுபோல் இப்போதும் சினிமாவில் வில்லன் நடிகர்களுக்கான மதிப்பு குறையவில்லை. அதனால்தான் ஹீரோ வேஷம் இல்லாவிட்டாலும் வில்லனாக நடித்தால் போதும் என்ற நிலைக்கு பகத் பாசில், விஜய் சேதுபதி போன்றவர்கள் வந்துவிடுகின்றனர். இரண்டு கேரக்டர்களிலும் மாறி மாறி நடிக்கின்றனர்.

அந்த வகையில் நடிகர் ராணா டகுபதி, முகேஷ் ரிஷி, பிரகாஷ் ராஜ், சத்யராஜ், ஆஷிக் வித்யார்த்தி போன்ற வில்லன் நடிகர்களுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கிறது. அதனால் இவர்களது சம்பளம் ரூ. 2 கோடி முதல், ரூ. 10 கோடி வரை இருக்கிறது. இன்னும் தமிழ் பட ஹீரோக்கள் 40 லட்சம், 50 லட்சம் ரூபாய் என சம்பளம் வாங்குகிற நிலையில், வில்லன் நடிகர்களின் காட்டில் பணமழை பொழிந்து வருகிறது.